மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
கர்நாடக சட்டசபையை கோமியத்தால் காங்கிரஸ் நிர்வாகிகள் சுத்தம் செய்திருப்பது பற்றி?
இது ஒன்றும் புதிது அல்ல. 2017-ல் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. அதிக இடங்களை வென்று ஆட்சியமைத்தபோது யோகியை முதல்வராகத் தேர்வுசெய்தது. லக்னோவில் அமைந்துள்ள முதல்வருக்கான இல்லமான காளிதாஸ் மார்க்குக்கு குடியேறும் முன், அங்கே கங்கை நீர், கோமியம் ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்து, சாமியார்களை வைத்து பூஜைகள் செய்து குடியேறினார் யோகி ஆதித்யநாத். அவர்களைப் பரிகாசம் செய்வதற்காக இதைச் செய்திருந்தால் பரவாயில்லை... மாறாக, அவர்களை நகல் செய்திருந்தால் உண்மையிலேயே வருந்தவேண்டிய விஷயம்தான். ஜனநாயகத்தின் புனிதம் கோமியத்தில் இல்லை. மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் இருக்கிறது.
த.சிவாஜி மூக்கையா
சீமான், அண்ணாமலை இருவரில் யாரிடம் அரசியல் முதிர்ச்சி உள்ளது?
ஒருவர் இருபதாயிரம் புத்தகங்கள் படித்துள்ளேன் எனும்போதும், மற்றவர் புலிகள் தலைவரே கறிவிருந்து பரிமாறினார் எனும்போதும் நமக்கு இப்படியான சந்தேகங்கள் எழும்தான். அதிரடி அரசியலுக்கு ரசிகர்கள் நிறைய உண்டு என்று அறிந்து வைத்திருக்கிற அளவுக்கு இவர்கள் இருவருக்கும் அரசியல் முதிர்ச்சி நிச்சயம் உண்டு.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
அ.தி.மு.க. ஆட்சி மட்டும் தொடர்ந்திருந்தால், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி இன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருப் போம் என்கிறாரே ஜெயக்குமார்?
சில்லரை மது விற்பனையை அரசு தன் வசம் எடுத்துக்கொண்டதே அவர் களது தங்கத் தலைவி அம்மாவின் காலத் தில்தானே. ஆட்சியிலில்லாதபோது பூரண மதுவிலக்கு என்பதும், ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக மது விலக்கு என்பதும் அரசியல்வாதி களின் நாவுக்கு வாடிக்கைதான்! தமிழ்நாட்டில் டாஸ்மாக் சரக்கு குடித்தவன் தள்ளாடுகிறானோ இல்லையோ, மதுவிலக்கு கொள்கை என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் தள்ளாட்டம்தான்.
எஸ்.மோகன், கோவில்பட்டி
தாய்மொழியில் எம்.பி.பி.எஸ். படித்தால் என்ன ஆகும்?
ஏற்கெனவே மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங் களில் தமிழ்வழிக் கல்வி இல்லை. அவர்களுக்கு தமிழ்ப் பாடம் இருக்கிறதே தவிர, தமிழ்வழிக் கல்வி கிடையாது. அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் தமிழ்வழிக் கல்வி இருக்கிறது. அதிலும் நிறைய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் பலர் ஆங்கிலவழிக் கல்வியைப் தேர்வு செய்கிறார்கள். சமூக ஊடகங்களில், சுவரொட்டிகளில் இடம்பெறும் தமிழைப் பார்த்தால், உண்மையான தமிழ் ஆர்வலர்களுக்கு காலிரண்டும் கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்துவிடும். இதில் மருத்துவப் படிப்பு தாய்மொழியில் என்பது தற்போதைக்கு பகல் கனவு மட்டும்தான். கனவு நிறைவேற காலம் கனிய வேண்டும்.
டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம் அனைத்திலும் மத்திய அரசு இப்படியான கைதுகளை அரங் கேற்றுவது எதைக் காட்டுகிறது?
மத்திய அரசு அமலாக்கத் துறை, சி.பி.ஐ. போன்ற வற்றை ஏவல் துறையாக வைத்திருப்பதைக் காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பலமாக தேர்தலை எதிர்கொள்வதை பா.ஜ.க. விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. வெளியில் எப்படிக் காட்டிக்கொண்டாலும் இமாச்சலப்பிரதேசம், கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பீதியை ஏற்படுத்தியிருப்பதைக் காட்டுகிறது. தேர்தல் கூட்டணி தாண்டி, எதிர்க்கட்சிகளுக்கு வேறுபல சவால்களும் காத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பலவற்றையும் காட்டக் கூடும்.
சி. ஜெயலட்சுமி, வாசுதேவநல்லூர்
கிரேக்க கடலில் அகதிகள் கப்பல் கவிழ்ந்து 79 பேர் பலியாகியிருக்கிறார்களே?
இது இந்த வருடத்தின் மிக மோசமான விபத்து என்று சொல்லப்படுகிறது. லிபியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து இத்தாலிக்கு வந்த படகில் 400 பேர் வரை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 100 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். 79 பேர் மரணம். எனில் மற்றவர் கள் நிலை அய்லான் குர்தி முதல் மிகச் சில அகதி களின் மரணம் மட்டுமே உலகின் இதயத்தை அசைக் கிறது. மற்றவை எல்லாம் வெறும் புள்ளிவிவரங்களாகக் கடந்துசெல்லப்படுகிறது.
நித்திலா, தேவதானப்பட்டி
ஆளுநர்-முதல்வர் மோதல் எப்போது முடிவுக்கு வரும்?
அரசியல் சட்டத்தில் ஒரு பக்கமாகக் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்போது.